தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் திமுகவின் எஃகு கோட்டையான சென்னையை அடியோடு உலுக்கியுள்ளது. இதுவரை திமுகவின் பலமாக இருந்த சென்னையின் 16 தொகுதிகளில், இம்முறை பெரும்பாலான இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அமோக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றாலும், அதற்காக அவர் கடும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. த.வெ.க வேட்பாளர் டி.செல்வம் தொடக்கத்தில் முன்னிலை வகித்த நிலையில், பல சுற்றுகள் கழித்தே உதயநிதி முன்னிலைக்கு வந்து இறுதியில் வெற்றி பெற்றார்.
இதேபோல் துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு, த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக்கிடம் கடும் போட்டியைச் சந்தித்து இறுதியில் 2-வது முறையாகத் தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார். உதயநிதி மற்றும் சேகர்பாபு மட்டுமே திமுக சார்பில் சென்னையில் வெற்றி பெற்ற முக்கிய முகங்களாக உள்ளனர். ஆனால், அதே சமயம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை தொகுதியிலும் தோல்வியைத் தழுவியுள்ளது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் அரசியல் வரைபடத்தையே த.வெ.க மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
