ஹைதராபாத்தில் ஒரு கேப் ஓட்டுநர் தனது காரில் பயணிகளுக்காக ஒட்டியுள்ள வினோதமான மற்றும் கடுமையான நிபந்தனைகள் அடங்கிய போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் போஸ்டரில், பயணிகள் தங்களை ‘பையா’ என்று அழைக்கக் கூடாது என்றும், காரின் கதவுகளை மெதுவாகச் சாத்த வேண்டும் என்றும் ஓட்டுநர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “உங்கள் திமிரை உங்கள் பையிலேயே வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் கொடுக்கும் பணம் வெறும் பயணத்திற்கு மட்டுமே, மரியாதைக்குறைவாக நடப்பதற்கு அல்ல” என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த விதிகளில் ஓட்டுநர் மேலும் சில சுவாரஸ்யமான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். காரினுள் ரொமான்ஸ் செய்ய அனுமதி இல்லை என்றும், கார் ஓட்டுநரின் சொத்து என்பதால் அதை மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தப் பதிவைக் கண்டு சிலர், ஓட்டுநர்களின் சுயமரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு இது அவசியம் என்று ஆதரவு தெரிவிக்கின்றனர். அதே வேளையில், மற்றொரு தரப்பினர் இந்த விதிகள் மிகவும் முரட்டுத்தனமாகவும், பயணிகளை அவமதிக்கும் வகையிலும் இருப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
