தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) தலைவருக்குச் சாதகமாகத் திரும்பி வரும் நிலையில், விஜய்யின் இந்த அசுர வளர்ச்சிக்கு அவரது ‘முழு நேர அரசியல்’ நிலைப்பாடே முக்கியக் காரணம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முன்னதாக, திராவிட அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் எனக் கூறி அரசியலுக்கு வந்த கமல்ஹாசனுக்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்குக் காரணம், கமல்ஹாசன் சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தியதுதான். இரண்டு குதிரைகளில் சவாரி செய்ததால், மக்களால் அவரை ஒரு முழு நேரத் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

​ஆனால், நடிகர் விஜய் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டுச் செயல்பட்டார். “ஜனநாயகன் தான் எனது கடைசித் திரைப்படம்; இனி எனது முழு நேரப் பணியும் அரசியல்தான்” என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டுப் படப்பிடிப்புகளை முடித்துக் கொடுத்தார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே, அந்தப் புகழையும் வருமானத்தையும் துறந்துவிட்டு முழுமையாக மக்கள் பணியில் இறங்கிய விஜய்யின் இந்தத் துணிச்சல், வாக்காளர்கள் மத்தியில் அவர் மீது ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் சொன்னதைச் செய்வார் என்ற பிம்பத்தை உருவாக்கியதே இந்தத் தேர்தலில் அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகளுக்கு அடிப்படை ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.