தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்! 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் அசுர பலத்துடன் முன்னிலை பெற்று வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தனது வெற்றிச் சான்றிதழைப் பெறுவதற்காகச் சென்னை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு விரைந்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அரசியல் களத்தில் ஒரு “புயலாய்” நுழைந்து, முதல் தேர்தலிலேயே கோட்டையைக் குறிவைத்து அடித்து நொறுக்கியுள்ள விஜய், வெற்றிச் சான்றிதழைப் பெற்ற கையோடு அடையாறில் உள்ள தனது பெற்றோரைச் சந்தித்து ஆசி பெறச் செல்வது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“மகன் அரசியலில் ஜெயிக்க மாட்டார்” என்று விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்துவிட்டு, தவெக-வின் முதல் எம்.எல்.ஏ-வாகவும், மக்கள் தலைவனாகவும் விஜய் வெற்றி நடை போடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
