சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், வேட்பாளர்கள் செலுத்தும் பிணைத்தொகை (Deposit) மற்றும் அதனைத் திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் தெளிவான விதிகளை வகுத்துள்ளது. இது குறித்து தற்போது பார்க்கலாம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்போது குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். அதன்படி  பொதுப் பிரிவு வேட்பாளர்கள்: ரூ. 10,000/- பட்டியலின (SC/ST) வேட்பாளர்கள்: ரூ. 5,000 செலுத்த வேண்டும்.

ஒரு வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைவது ஒருபுறம் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெறத் தவறினால் அவர் செலுத்திய பிணைத்தொகை அரசுடைமையாக்கப்படும். இதனையே அரசியல் வட்டாரத்தில் “டெபாசிட் காலி” என்று அழைக்கிறோம்.

தேர்தல் விதிகளின்படி, ஒரு தொகுதியில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் (நோட்டா – NOTA வாக்குகளைத் தவிர்த்து), 6-ல் ஒரு பங்கு (அதாவது 16.67%) வாக்குகளை ஒரு வேட்பாளர் கண்டிப்பாகப் பெற வேண்டும். இந்த இலக்கை எட்டத் தவறினால், அவர் செலுத்திய டெபாசிட் தொகை அவருக்குத் திரும்பக் கிடைக்காது.

இந்த விதிமுறையானது தேவையற்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதைத் தவிர்க்கவும், தேர்தல் களத்தின் தீவிரத்தை உறுதிப்படுத்தவும் நடைமுறையில் உள்ளது. ஒரு வேட்பாளர் வெற்றியைத் தவறவிட்டாலும், 16.67% வாக்குகளைப் பெற்றுவிட்டால் தனது டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.