ஐபிஎல் வரலாற்றில் நீங்காத சர்ச்சையாக இடம்பிடித்துள்ள ஷாருக்கானின் ‘வான்கடே மைதான தடை’ விவகாரம், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் பேட்டியால் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. கடந்த 2012, மே 16-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியது. வெற்றிக்குப் பிறகு தனது குழந்தைகள் மற்றும் நண்பர்களின் குழந்தைகளுடன் ஷாருக்கான் மைதானத்திற்குள் நுழைந்தார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களுக்கும் ஷாருக்கானுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கூறி ஷாருக்கானை அதிகாரிகள் தடுத்த போது, அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக மும்பை கிரிக்கெட் சங்கம் குற்றம் சாட்டியது. இதன் விளைவாக, அவருக்கு 5 ஆண்டுகள் வான்கடே மைதானத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. ஆனால், தனது குழந்தைகளை பாதுகாப்புப் பணியாளர்கள் தவறாக நடத்தியதாலேயே தான் ஆவேசமடைந்ததாக ஷாருக்கான் அப்போது விளக்கம் அளித்திருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அப்போது வான்கடே பகுதியில் ஏசிபி-யாக (ACP) பணியாற்றிய இக்பால் ஷேக் சமீபத்தில் ஒரு பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார். “ஷாருக்கான் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் விசில் அடித்து அவர்களைத் தடுத்தார். அந்தச் சிறிய தவறான புரிதல் தான் மிகப் பெரிய மோதலாக வெடித்தது. நிலைமை மோசமாவதைத் தவிர்க்க நானே தலையிட்டு ஷாருக்கானை மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ல் விதிக்கப்பட்ட இந்தத் தடை, 2018-ம் ஆண்டு முன்னதாகவே நீக்கப்பட்டது. இருப்பினும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் உரிமையாளருக்குத் தடை விதிக்கப்பட்டது அதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
