நடிகர் பார்த்திபன் தனக்கு ‘சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். முன்னதாக அவர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, கடந்த வாரம் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் கடந்த 27-ம் தேதி அவருக்கு அந்தச் சான்றிதழை வழங்கினார்.

இதற்காக நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதிக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்தார். பார்த்திபனின் நன்றியை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஒருவர் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை அவரது நடத்தையில் தான் காட்ட வேண்டுமே தவிர, அதற்குச் சான்றிதழ் அவசியமில்லை என்று கருத்து தெரிவித்தார்.

இந்தச் சான்றிதழ் விளம்பரத்திற்கு வேண்டுமானால் பயன்படும் என்றும், உண்மையில் நாம் பின்பற்றும் முறையில்தான் அது உள்ளது என்றும் அவர் கூறினார். அதற்குப் பதில் அளித்த பார்த்திபன், “நல்லவர்” என்று சொல்வதற்குக்கூட இன்று சான்றிதழ் தேவைப்படுகிறது என்றார். இதனையடுத்து, பார்த்திபனுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தார்.