பங்களாதேஷின் பைரப் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு வயது குழந்தையுடன் இறங்க முயன்ற தந்தை, நிலைதடுமாறி ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையிலான மரணப் பள்ளத்தில் விழுந்தார். தன் கண் முன்னே குழந்தை விழுவதைக் கண்டு துடித்த தந்தை, ஒரு நொடி கூட யோசிக்காமல் தானும் உள்ளே குதித்து குழந்தையை இறுக அணைத்துக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் 8 ரயில் பெட்டிகள் அவர்கள் மீது ஏறிச் சென்றன.

பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவர்கள் இறந்துவிட்டதாகக் கருதி அலறிய நிலையில், ரயில் நின்றவுடன் இருவரும் சிறு காயம் கூட இன்றி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ​இந்த விபரீதத்திற்கு ரயிலின் தாமதமும், பயணிகளின் கவனக்குறைவுமே காரணம் என்று கூறப்படுகிறது. ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்த ‘திதாஸ் கம்யூட்டர்’ ரயில், பிளாட்பாரத்தை விட்டு நகரத் தொடங்கியபோது அவசரமாக இறங்க முயன்றதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

“இது முழுக்க முழுக்க இறைவனின் கருணை” என்று ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இது போன்ற உயிரைப் பணயம் வைக்கும் செயல்களில் பயணிகள் ஈடுபட வேண்டாம் என்றும், ஓடும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ முயற்சிப்பது மரணத்திற்கு அழைப்பு விடுப்பதற்குச் சமம் என்றும் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.