ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வந்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆதிக்கத்தை, ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் டோனோவன் ஃபெரீரா தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தார். லாகி பெர்குசன் வீசிய பந்தை அவர் 105 மீட்டர் தூரத்திற்கு சிக்சராக விளாசியது ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி கட்டத்தில் அதிரடி தேவைப்பட்டது. அப்போது 19-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் லாகி பெர்குசனின் பந்தை எதிர்கொண்ட டோனோவன் ஃபெரீரா, ஒரு ‘ஷார்ட் பிட்ச்’ பந்தை எதிர்கொண்டு மைதானத்திற்கு வெளியே பறக்கச் செய்தார்.

105 மீட்டர் தூரம் சென்ற இந்த சிக்சர், நடப்பு ஐபிஎல் 2026 சீசனின் 3-வது மிக நீளமான சிக்சராக பதிவாகியுள்ளது. முதலிடத்தில் பெங்களூரு வீரர் டிம் டேவிட் (106 மீட்டர்) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.

பிரம்மாண்ட இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து மின்னல் வேக தொடக்கம் தந்தார். மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் 51 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.

இறுதியில் ஃபெரீராவின் அதிரடி அரைசதத்தால், இந்த சீசனில் இதுவரை தோல்வியே அடையாத பஞ்சாப் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் வீழ்த்தியது. இதன் மூலம் பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.