கொலம்பியாவில் 1914-ல் பிறந்து, தற்போது அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வரும் லூயிஸ் கானோ உலகின் மிக வயதான மனிதர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 111 வயதைக் கடந்த இவர், தனது நீண்ட ஆயுளுக்கு மிகவும் எளிமையான மூன்று விதிகளைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார். மது மற்றும் புகையிலை பழக்கம் இல்லாமல் இருப்பது, ஆழ்ந்த தூக்கம் மற்றும் மற்றவர்களிடம் நன்றாக நடந்துகொள்வது ஆகியவையே அவை.
கொலம்பிய ராணுவத்தில் பணியாற்றியது முதல் சொந்தமாகப் பேருந்து நிறுவனம் நடத்தியது வரை பல சாதனைகளைச் செய்துள்ள இவர், காய்கறிகள் நிறைந்த உணவுகளை உண்பதையும், 105 வயது வரை சுறுசுறுப்பாகத் தோட்டம் அமைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தனது 10 பிள்ளைகளில் இருவருடன் வசித்து வரும் கானோவுக்கு 11 பேரப்பிள்ளைகளும், பல கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர். குடும்பத்தின் அன்பும் ஆதரவுமே தனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்று கூறும் இவர், இப்போது தனது வீட்டின் அருகே விமானங்கள் பறப்பதைப் பார்த்து மகிழ்வதையே பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார்.
இவரது சாதனையைப் பாராட்டி அந்த நகர மேயர் கௌரவித்துள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்தநாளின் போது அப்பகுதி மக்கள் தங்கள் கார்களின் ஒலி எழுப்பி உற்சாகமாக வாழ்த்துகளைத் தெரிவித்து இவரை ஒரு பிரபலமாகவே கொண்டாடி வருகின்றனர்.
