2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பலமுனைப் போட்டிகளால் சூடுபிடித்துள்ளது. இதில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) சுமார் 15% வரை வாக்குகளை அறுவடை செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர் சுமந்த் சி. ராமன் தெரிவித்துள்ளார். இந்த 15% வாக்குகள் யாருடைய வெற்றியைப் பறிக்கப்போகிறது என்பதுதான் இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் ‘மில்லியன் டாலர்’ கேள்வியாக உள்ளது.
சுமந்த் சி. ராமனின் கணிப்புப்படி, விஜய்யின் இந்த அரசியல் நகர்வுகள் பெரும்பாலும் திமுக எதிர்ப்பு வாக்குகளையே சிதறடிக்கச் செய்யும். தமிழகத்தைப் பொறுத்தவரை 40% வாக்கு சதவீதத்தை எட்டும் கட்சியே ஆட்சிக் கட்டிலில் அமர முடியும் என்ற நிலையில், விஜய்யின் வருகை அந்த ‘மேஜிக் நம்பரை’ எட்டுவதில் முட்டுக்கட்டையாக இருக்குமா என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக மாறியுள்ளது. விஜய்யால் யாருக்கு நஷ்டம்? திமுகவா அல்லது அதிமுகவா? என்ற கேள்விக்கு, மே 4-ம் தேதி வெளியாகும் முடிவுகள் தான் விடை சொல்லும்.
