தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக பரவிய வதந்திகளுக்கு அந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அதிரடியாகப் பதில் அளித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “தேவையற்ற வதந்திகளுக்குப் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விஜய் விரும்பவில்லை; மக்களின் கடமைகள் பற்றியே அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், மே 4-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை விஜய் நேற்றே வழங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். “50 வருட அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான முடிவை மே 4-ம் தேதி மக்கள் வழங்குவார்கள்” என ஆதவ் அர்ஜுனா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ள இந்த கருத்து, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
