திராவிட இயக்கச் சிந்தனைகளுடன் திமுகவில் தீவிரமாக இயங்கி வரும் திவ்யா சத்யராஜ், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் திருமண முறை குறித்து மிகவும் துணிச்சலான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “எனக்கு நிறுவனமயமாக்கப்பட்ட திருமணத்தின் மீதோ, தாலி கட்டும் சடங்குகள் மீதோ துளியும் நம்பிக்கை இல்லை.
ஒருவர் மீது விருப்பம் இருந்தால் அவருடன் இணைந்து வாழலாம், அதற்குத் திருமணம் அவசியமில்லை. ஏன், இருவரும் ஒரே வீட்டில் கூட இருக்க வேண்டியதில்லை” என்று கூறி அதிர வைத்துள்ளார். மேலும், திருமணம் செய்து கொண்டுதான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தையும் தான் ஏற்க மறுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“எனக்கு ஜாதகம் கிடையாது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். என் தந்தை சத்யராஜுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாததால் எனக்கு ஜாதகம் எழுதவில்லை. காதலிக்கும்போது பிரிவுகள் ஏற்பட்டால் நான் யாரிடமும் போய் அழுது கொண்டு இருக்க மாட்டேன், அதிலிருந்து நானே வெளிவந்துவிடுவேன்” என்றும் திவ்யா பேசியுள்ளார்.
தனது மகளின் நிம்மதி தான் முக்கியமே தவிர, அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கவலை தனது தந்தைக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திவ்யா சத்யராஜின் இந்தப் பேச்சு, பாரம்பரியக் குடும்ப அமைப்பைக் கடைபிடிப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், முற்போக்குச் சிந்தனையாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
