ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் (101 ரன்கள்) 20 ஓவர்களில் 207 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி, சென்னையின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 104 ரன்களுக்கே சுருண்டது. அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஆனால், இந்த வெற்றியைத் தாண்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்தது சிஎஸ்கே வீரர் முகேஷ் சௌத்ரியின் அர்ப்பணிப்புதான். தனது தாயார் இரண்டு நாட்களுக்கு முன்புதான் காலமானார் என்ற பெரும் சோகத்திலும், அணியின் வெற்றிக்காக களமிறங்கிய முகேஷ் சௌத்ரி, மும்பையின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக்கை அவுட் செய்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

விக்கெட் எடுத்த பிறகு ஆரவாரம் செய்யாமல், வானத்தை நோக்கி விரலைக் காட்டி ‘இது உனக்காக அம்மா’ என்பது போல அவர் செய்த சைகை மைதானத்தில் இருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.

தாயின் இறுதிச்சடங்கை முடித்த கையோடு அணிக்குத் திரும்பிய முகேஷின் மன உறுதியைப் பாராட்டிய கேப்டன் ருதுராஜ், இந்த வெற்றியை அவருக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறினார். வீரர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.