தலைநகர் டெல்லியில் இந்திய வருவாய்ப் பணி (IRS) அதிகாரியின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ராகுல் மீனா (23) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் இரண்டு மாநிலங்களில் அடுத்தடுத்து நிகழ்த்திய கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்து நாட்டை உலுக்கியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்த விரிவான விவரங்கள் வருமாறு, ராஜஸ்தான் மாநிலம் ராஜ்கர் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் மீனா, கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தனது நண்பர் ஒருவருடன் திருமண விழா ஒன்றிற்குச் சென்றுள்ளார். நண்பரை திருமண மண்டபத்தில் விட்டுவிட்டு, அங்கிருந்து நழுவிய ராகுல், நேரடியாக நண்பரின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணைக் கொலை செய்ய முயன்றுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
ராஜஸ்தான் போலீஸார் ராகுலைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மும்பை – டெல்லி விரைவுச் சாலையில் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்றை வழிமறித்து ஏறி, ஏப்ரல் 22-ஆம் தேதி அதிகாலை டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளார். முன்னதாக டெல்லியில் உள்ள ஐஆர்எஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் ராகுல் வேலைக்காரராகப் பணியாற்றி வந்துள்ளார். அவரது நடத்தை சரியில்லாத காரணத்தால் அண்மையில் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். எனினும், அந்த அதிகாரியின் குடும்பத்தினர் எப்போது நடைப்பயிற்சிக்குச் செல்வார்கள் என்ற விவரத்தை அவர் நன்கு அறிந்திருந்தார்.
நேற்று காலை 6:30 மணியளவில் அதிகாரியும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியேறிய சமயம் பார்த்து, கள்ளச் சாவியைப் பயன்படுத்தி ராகுல் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அங்கு தனியாக இருந்த அதிகாரியின் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, செல்போன் சார்ஜர் கேபிளால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.
வீட்டிலிருந்து ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளைத் திருடிக்கொண்டு ராகுல் வெளியேறும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு டெல்லி மற்றும் ராஜஸ்தான் போலீஸார் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில் ராகுல் கைது செய்யப்பட்டார். “நண்பனின் மனைவி மீதான அத்துமீறல் தொடங்கி, ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்தது வரை ராகுலின் செயல்கள் மிகுந்த வன்மம் நிறைந்தவை” என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு மிகுந்த டெல்லி அதிகாரிகளின் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கைதான ராகுலிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
