செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வேக வளர்ச்சி, தற்போது வங்கித்துறையையே அச்சுறுத்தும் நிலைக்குத் தள்ளியுள்ளது. ‘சிரிஷ்’ (Shirish) என்ற ‘எக்ஸ்’ (X) வலைதள பயனர் ஒருவர், OpenAI நிறுவனத்தின் புதிய ‘ChatGPT Images 2.0’ மாடலைப் பயன்படுத்தி 69,000 ரூபாய்க்கான யூகோ வங்கி (UCO Bank) செக் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இது அச்சு அசல் உண்மையான செக் போலவே, வங்கி கிளை விவரங்கள், கணக்கு எண் மற்றும் MICR குறியீடுகள் என அனைத்தையும் தத்ரூபமாகக் கொண்டுள்ளது. “நாம் காலி” (We are so cooked) என்ற கேப்ஷனுடன் அவர் பகிர்ந்த இந்த புகைப்படம், இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் அச்சத்தையும் கிளப்பியுள்ளது.

​முன்பெல்லாம் AI கருவிகளால் எழுத்துக்களைச் சரியாக உருவாக்க முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால், இந்த புதிய அப்டேட்டில் க்யூஆர் கோடுகள் (QR Codes), அரசு ஆவணங்கள், மருந்துச் சீட்டுகள் மற்றும் வங்கி ஆவணங்களை மிகத் துல்லியமாக உருவாக்க முடிகிறது. இது போலி ஆவணங்கள் மூலம் மோசடிகள் நடப்பதற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்துவிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

வெறும் 69,000 ரூபாய்க்கு ஒரு செக் உருவாக்கப்பட்டது ஒருபுறம் வேடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும், இந்தத் தொழில்நுட்பம் தவறானவர்களின் கைகளில் கிடைத்தால் மிகப்பெரிய பொருளாதாரச் சரிவையும், அடையாளத் திருட்டுகளையும் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.