உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு முக்கிய தீர்ப்பில், ஒரு நபர் குழந்தையின் உயிரியல் தந்தை (Biological Father) இல்லை என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகிவிட்டால், அந்தக் குழந்தைக்கு அவர் பராமரிப்புத் தொகை (Maintenance) வழங்க வேண்டிய அவசியமில்லை என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளது. 2016-ல் திருமணமான தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மனைவி தனக்கும் தன் குழந்தைக்கும் பராமரிப்புத் தொகை கேட்டு நீதிமன்றத்தை அணுகினார்.
ஆனால், கணவர் தரப்பில் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், அந்தக் குழந்தைக்கு அவர் தந்தை இல்லை என்பது ஆதாரத்துடன் நிரூபணமானது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அந்த நபர் குழந்தைக்குப் பணம் தரத் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் குழந்தையின் நலனே முக்கியம் எனக் கருதிய நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் நோம்மெய்காபம் கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லி அரசுக்கு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குழந்தையின் கல்வி, உணவு மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, ஒரு அதிகாரியை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்திய சாட்சியச் சட்டத்தின் படி, திருமணத்தின் போது பிறக்கும் குழந்தை சட்டபூர்வமானது என்றாலும், அறிவியல் பூர்வமான டிஎன்ஏ ஆதாரங்களை ஒதுக்கித்ள்ள முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
