உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து லாரியில் இருந்து டீசல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதைக் கண்ட அப்பகுதி மக்கள், போட்டி போட்டுக்கொண்டு டீசலை அள்ளிச் சென்றனர்.

பிரதாப்கர் மாவட்டத்தின் முக்கிய நெடுஞ்சாலையில் இன்று காலை இந்த டீசல் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

 

லாரி கவிழ்ந்தவுடன் அதிலிருந்த டீசல் கசிந்து சாலையில் ஆறாக ஓடியது. இந்தத் தகவலறிந்த சுற்றுவட்டாரக் கிராம மக்கள், கையில் கிடைத்த வாளிகள், பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாத்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். லாரியின் அருகில் எப்போது வேண்டுமானாலும் தீ விபத்து ஏற்படக்கூடும் என்ற ஆபத்தைக்கூட உணராமல், சாலையில் ஓடிய டீசலை அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கூட்டத்தைக் கலைத்து மக்களை அப்புறப்படுத்தினர். பின்னர் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆபத்தான முறையில் மக்கள் டீசலை அள்ளிச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.