ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று (ஏப்ரல் 20) மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 முதல் 7.7 வரை பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இவாட், அமோரி மற்றும் ஹொக்கைடோ ஆகிய மாகாணங்களுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலில் சுமார் 3 மீட்டர் (9.8 அடி) உயரத்திற்கு ராட்சத அலைகள் எழக்கூடும் என்பதால், கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே குஜி துறைமுகத்தில் 80 சென்டிமீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்க பிரதமர் சானே தகாய்ச்சி (Sanae Takaichi) தலைமையில் அவசரகால அதிரடிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டோக்கியோ வரை உணரப்பட்டதால் ஜப்பானியர்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.