ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தோல்வியைத் தழுவிய நிலையில், அந்த அணியின் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக தொடரிலிருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணிக்காக பேட்டிங் செய்த ஆயுஷ் மாத்ரே தொடக்க முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன்களைக் குவித்துக் கொண்டிருந்த வேளையில், அவருக்குத் திடீரென காலில் பலத்த தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவரால் ரன்கள் ஓட முடியாமல் கடும் அவதிக்குள்ளானார். துரதிர்ஷ்டவசமாக, இந்த வலியுடனேயே விளையாடிய அவர் அடுத்த சில பந்துகளிலேயே ஆட்டமிழந்தார்.
போட்டிக்குப் பிறகு மாத்ரேவின் காயத்தைப் பரிசோதித்த மருத்துவக் குழு, அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் சற்று தீவிரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அவர் முழுமையாகக் குணமடைய நீண்ட காலம் தேவைப்படும் என்பதால், நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகமே என்று கூறப்படுகிறது. அவர் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சென்னை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் சென்னை அணியின் பேட்டிங்கிற்குப் பலம் சேர்த்து வந்த ஆயுஷ் மாத்ரே விலகினால், அது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே ஐதராபாத்திடம் தோல்வியடைந்துள்ள நிலையில், முக்கிய வீரரின் காயம் சென்னை அணியின் பிளே-ஆப் வாய்ப்புகளைப் பாதிக்குமா என்ற கவலை எழுந்துள்ளது.
மேலும் ஆய்ஷ் மாத்ரே விலகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக உர்வில் பட்டேல் பிளையிங் லெவனில் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பல வீரர்கள் காயம் காரணமாக தொடர்ந்து சென்னை அணியில் இருந்து விலகி வருவது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வீரர்களின் உடற்தகுதி மற்றும் காயம் போன்றவற்றை அந்த அணி சரியாக கையாளவில்லை எனவும் இதனால் தான் சென்னை அணி தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது எனவும் அஸ்வின் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
