ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியிலிருந்து விலகி, மீண்டும் தனது பழைய அணியான ராஜஸ்தான் ராயல்ஸில் (RR) இணைந்துள்ள ரவீந்திர ஜடேஜா, ரசிகர் ஒருவரின் கேள்விக்குத் தனது பாணியில் சுவாரசியமான பதிலளித்துள்ளார்.

நடப்பு சீசன் தொடங்குவதற்கு முன்பாக ஐபிஎல் அரங்கில் ஒரு மிகப்பெரிய ‘டிரேடிங்’ நடைபெற்றது. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை சென்னை அணிக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக ஜடேஜா மற்றும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் தன்வசப்படுத்தியது.

இந்த மாற்றம் ராஜஸ்தான் அணிக்குச் சாதகமாக அமைந்துள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில், ஜடேஜா இல்லாத சென்னை அணி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சிக்குப் பிறகு ஜடேஜா ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளம் ரசிகர், “சார், உங்களைச் சென்னை அணியில் நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம்” என்று உருக்கமாகக் கூறினார்.

அதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகரத் தொடங்கிய ஜடேஜா, சட்டென்று திரும்பிப் பார்த்து, “ராஜஸ்தான் அணியில் இருப்பதில் என்னப்பா குறை?” (Rajasthan mein kya problem hai bhai?) என்று நகைச்சுவையாகக் கேட்டுவிட்டுச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜடேஜா தனது ஐபிஎல் பயணத்தை 2008-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில்தான் தொடங்கினார். அந்த ஆண்டு ஷேன் வார்னே தலைமையில் கோப்பையையும் வென்றார். பின்னர் 2012-ல் சிஎஸ்கே-வில் இணைந்து 3 முறை சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். தற்போது மீண்டும் தனது ‘தாய்’ அணிக்கே திரும்பியுள்ளார்.

மேலும் இன்று (ஏப்ரல் 19) ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.