சீனாவின் லியோனிங் மாகாணத்தில் மறைந்த தனது தந்தைக்கு மரியாதை செலுத்துவதாக நினைத்து ஒரு குடும்பம் செய்த காரியம், இப்போது அவர்களுக்கே வினையாக முடிந்துள்ளது. கார்கள் மீது அதிக மோகம் கொண்ட 70 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் காலமானார்.
அவரது ஆசையை நிறைவேற்ற நினைத்த பிள்ளைகள், சுமார் 1.49 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘மெர்சிடிஸ் பென்ஸ் S450L’ சொகுசு காரையே அவரது சடலத்துடன் சேர்த்து நிலத்தில் குழி தோண்டி புதைத்தனர். அந்த காரில் இருந்த ‘8888’ என்ற பேன்சி நம்பர் பிளேட்டின் மதிப்பு மட்டுமே சுமார் 13.6 லட்சமாகும்.
சிவப்புத் துணியால் போர்த்தப்பட்ட அந்த காரை புதைக்க உதவிய கிராம மக்களுக்குத் தலா 6,800 ரூபாய் அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டது. ஆனால், இந்த விஷயம் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, அடுத்த நாளே சீன அரசு அதிகாரிகள் களத்தில் இறங்கினர். “இது சட்டவிரோதமான மற்றும் பிற்போக்குத்தனமான மூடநம்பிக்கை” என்று சாடிய அரசு, புதைக்கப்பட்ட காரை உடனடியாகத் தோண்டி எடுக்க உத்தரவிட்டது.
நிலத்தைச் சீரமைப்பதற்கான செலவு, அபராதம் மற்றும் பகிரங்க மன்னிப்பு என அந்தக் குடும்பத்திற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. “இறந்தவர்களுக்குக் காகிதத்தில் செய்த கார், வீடுகளை எரிப்பதுதான் வழக்கம், நிஜக் காரையே புதைத்து சுற்றுச்சூழலை நாசமாக்குவதா?” என நெட்டிசன்கள் அந்தக் குடும்பத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
