பெரம்பூர் தேர்தல் பரப்புரையில் பேசிய நடிகர் சத்யராஜ், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சரை ‘அங்கிள்’ என்று அழைத்ததை மிகக் கடுமையாகச் சாடினார். தம்பி விஜய் முதலில் அம்பேத்கர், பெரியார் கொள்கைகளைப் பேசியபோது தமக்கு மிகவும் பெருமையாக இருந்ததாகவும், ஆனால் போகப் போக ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை இவ்வளவு ஒருமையில் ‘ஸ்டாலின் அங்கிள்’ என்று அவர் குறிப்பிட்டது தமக்கு ‘பகீர்’ என்று இருந்ததாகவும் சத்யராஜ் தெரிவித்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருக்கும் உரிய மரியாதை கொடுக்கும் ஒரு நபர், பொதுவெளியில் இப்படி தரம் தாழ்ந்து பேசுவது முறையா என அவர் கேள்வி எழுப்பினார்.

​மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மிகவும் பெருந்தன்மையோடு இருப்பதால் தான் நீங்கள் இப்படி எல்லாம் பேச முடிகிறது என்றும், இதே போன்ற விமர்சனத்தை வேறு ஒரு தலைவர் ஆட்சியில் இருந்தபோது சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை விஜய் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என எச்சரிக்கும் தொனியில் பேசினார். ஒரு முதலமைச்சரை ஒருமையில் அழைப்பது முறையல்ல என்று சுட்டிக்காட்டிய சத்யராஜின் இந்த அனல் பறக்கும் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.