இந்தியாவின் ‘ஏசி சிட்டி’ என்று புகழப்பட்ட பெங்களூரு நகரம், தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. பல தசாப்தங்களாக இதமான தட்பவெப்ப நிலைக்குப் பெயர் பெற்ற இந்த நகரத்தில், தற்போது கோடைக்கால வெப்பம் கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு காணொளியில், பெண் ஒருவர் தனது வீட்டில் குளிரூட்டி (AC) பொருத்துவதைச் சுட்டிக்காட்டி, “உன் வானிலைக்காகத்தான் உன் போக்குவரத்து நெரிசலைச் சகித்துக் கொண்டேன், ஆனால் இது ஒரு துரோகம்” எனப் பதிவிட்டது ஒட்டுமொத்த நகரத்தின் மனநிலையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இந்தத் திடீர் வெப்ப மாற்றத்திற்குத் திட்டமிடப்படாத நகரமயமாக்கலும், பசுமைப் போர்வை குறைந்து வருவதுமே முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. ஒரு காலத்தில் ஏரிகள் மற்றும் மரங்கள் நிறைந்த சோலைவனமாகத் திகழ்ந்த பெங்களூரு, தற்போது கான்க்ரீட் கட்டிடங்கள் நிறைந்த காடாக மாறி வருவதால் புவி வெப்பமடைதலின் தாக்கம் இங்குத் தீவிரமாக உணரப்படுகிறது. பழைய பெங்களூருவின் குளிர்ச்சியை இழந்த மக்கள், இப்போது ஏசி இல்லையென்றால் வாழவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
