உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) ஏடிஎம் மையத்திற்குள் நுழைய முயன்று குதிரை ஒன்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகளின் விநோதமான செயல்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ இணையவாசிகளை ஒருபுறம் வியப்பிலும், மறுபுறம் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

ஜான்சி பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தின் வாசலில் நின்றிருந்த குதிரை ஒன்று, திடீரென ஏடிஎம் கதவைத் தனது தலையால் முட்டித் தள்ளியுள்ளது. கதவு திறக்காததால் நீண்ட நேரம் அங்கேயே நின்று கொண்டு கதவைத் திறக்கப் போராடியது. குதிரையின் இந்தச் செயலால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கு முன்னதாக, அந்தப் பகுதியில் குதிரைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததால் சிறுது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. நிலைமை மோசமாவதைத் தவிர்க்க, அங்கிருந்த இளைஞர் ஒருவர் சாதுர்யமாகச் செயல்பட்டு ஏடிஎம் மையத்தின் ஷட்டரை இழுத்து மூடினார். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவருக்குச் சொந்தமான குதிரைகள் இரவு நேரத்தில் கட்டப்படாமல் அவிழ்த்து விடப்பட்டதும், அதில் ஒரு குதிரை வழிதவறி ஏடிஎம் மையத்திற்கு வந்ததும் தெரியவந்தது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒருவேளை இந்தக் குதிரைக்கும் எஸ்பிஐ வங்கியில் கணக்கு இருக்குமோ என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கையில் காசு தீர்ந்து போயிருக்கும், அதான் குதிரையே நேரில் பணம் எடுக்க வந்துவிட்டது என்று மற்றொருவர் கிண்டலடித்துள்ளார். ஏடிஎம் மெஷினே இந்த ‘புதிய வாடிக்கையாளரைப்’ பார்த்து மிரண்டிருக்கும்” எனப் பலரும் சிரிப்பு எமோஜிகளுடன் பதிவிட்டு வருகின்றனர். இதுதான் ஏடிஎம் மையத்தின் உண்மையான ‘ஹார்ஸ் பவர்’ (Horse Power)” எனச் சிலர்  புகழ்ந்துள்ளனர்.