கேரளாவில் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த நித்தின் ராஜ் என்ற மாணவர், கண்ணூர் அஞ்சரகண்டி அரசு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவம் பயின்று வந்தார்.
மேலும் அனாடமி பாடப்பிரிவு பேராசிரியர்கள் இருவர் மற்றும் சில முதுநிலை மாணவர்கள், நித்தின் ராஜை சாதி, மதம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் இழிவுபடுத்தியதோடு, அவரது வறுமை நிலையையும் கேலி செய்து ராகிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நித்தின் ராஜ், கல்லூரி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாணவர் தற்கொலைக்கு முன்னதாக வெளியிட்ட ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில், பேராசிரியர்கள் ராம் மற்றும் சங்கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாநில ஆளுநரின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, 300-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பெற்றது.
அதில் பேராசிரியர் ராமின் கடுமையான ராகிங் கொடுமையே மாணவரின் மரணத்திற்கு முக்கிய காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள பேராசிரியர் ராம் அதிரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கல்வி நிலையங்களில் ராகிங் கொடுமைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
