ஐ.பி.எல். கிரிக்கெட் என்றாலே பேட்டர்களும், பவுலர்களும் தான் வெளிச்சத்தில் இருப்பார்கள். ஆனால், ஆர்.சி.பி. அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி முதல் ஸ்மிருதி மந்தனா வரை அனைவரையும் களத்தில் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் ஒரு பெண்மணி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறார். அவர் தான் அணியின் ஸ்போர்ட்ஸ் மசாஜ் தெரபிஸ்ட் நவநீதா கௌதம்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆர்.சி.பி. அணியில் இணைந்த நவநீதா கௌதம், ஐ.பி.எல். வரலாற்றிலேயே ஒரு அணியின் சப்போர்ட் ஸ்டாஃப் (Support Staff) பிரிவில் இடம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கிரிக்கெட் உலகில், ஒரு பெண் பிசியோதெரபி பிரிவில் இணைந்தது அப்போது ஒரு புரட்சிகரமான மாற்றமாகப் பார்க்கப்பட்டது.

சமீபத்தில் விராட் கோலிக்கு நவநீதா மசாஜ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. மைதானத்தில் மின்னல் வேகத்தில் ஓடுவது, நீண்ட நேரம் பேட்டிங் செய்வது என அதீத உடல் உழைப்பைச் செலுத்தும் கோலி போன்ற வீரர்களுக்கு, போட்டிக்குப் பிறகு தசைகளைத் தளர்த்தவும், காயங்கள் ஏற்படாமல் தடுக்கவும் நவநீதாவின் ‘மேனுவல் தெரபி’ மற்றும் ‘சாஃப்ட் டிஷ்யூ’ நுட்பங்கள் பெரிதும் உதவுகின்றன.

ஆண்களின் டிரெஸ்ஸிங் ரூமில் ஒரு பெண் பணியாற்றுவது குறித்து தொடக்கத்தில் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு நவநீதா அளித்த நெகிழ்ச்சியான பதில் அனைவரையும் கவர்ந்தது. அணியில் இருப்பவர்களை நான் வேற்று ஆட்களாகப் பார்க்கவில்லை. என்னைச் சுற்றி எப்போதும் 20 சகோதரர்கள் இருப்பதாகவே உணர்கிறேன். வீரர்களும், நிர்வாகமும் நமது திறமையின் மீது நம்பிக்கை வைக்கும்போது, அங்கே ஆணா – பெண்ணா என்ற பாகுபாட்டிற்கு இடமில்லை என்றார்.

ஐ.பி.எல். தொடரில் இவரது சிறப்பான பணியைக் கண்டு வியந்த ஆர்.சி.பி. நிர்வாகம், மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரிலும் இவருக்கு முக்கியப் பொறுப்பை வழங்கியது. தற்போது மகளிர் அணியின் ‘ஹெட் அத்லெடிக் தெரபிஸ்ட்’ ஆகவும் நவநீதா பணியாற்றி வருகிறார். ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெர்ரி போன்ற வீராங்கனைகளின் உடற்தகுதியை உறுதி செய்வதிலும் இவரது பங்கு அளப்பரியது. மேலும் களத்தில் வீரர்கள் சிக்ஸர்களை விளாசினாலும், அவர்களை அதற்குத் தயார் செய்யும் பின்னணி வீரராக நவநீதா கௌதம் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.