இந்தியாவின் நிதித் துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் மற்றும் ஊழியர்களின் மனநலன் குறித்த விவாதங்கள், ஐ.ஐ.டி. (IIT) முன்னாள் மாணவர் ஒருவரின் பதவி விலகலைத் தொடர்ந்து மீண்டும் சூடுபிடித்துள்ளன. ஐ.ஐ.டி. டெல்லியில் பயின்ற 24 வயதான சிக்ராக் மதன் என்ற இளைஞர், ஆண்டுக்கு ரூ. 17 லட்சம் ஊதியம் கிடைத்தும் தனது கார்ப்பரேட் வங்கிப் பணியைத் துறந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பட்டதாரி இளைஞர்களின் பெரும் கனவாகக் கருதப்படும் இத்தகைய உயரிய ஊதியத்துடன் கூடிய பணி, நிஜத்தில் மிகுந்த மன உளைச்சலைத் தருவதாக மதன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தொடக்கத்தில் காலை 9 முதல் இரவு 7 மணி வரை என்று இருந்த பணி நேரம், படிப்படியாக அதிகரித்து வாரத்திற்கு 6 நாட்கள் வேலை என்றானது. இதனால் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஓய்வுக்கும் இடமில்லாமல் போனது.

அலுவலகத்தில் உணவு உண்பதற்குக்கூட வெறும் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்ற பெயரில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அலுவலக நேரத்தைத் தாண்டியும் பணி குறித்த சிந்தனைகள் துரத்துவதால், மனரீதியாகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிதித் துறையில் உள்ள மூத்த அதிகாரிகளின் கூற்றுப்படி, கார்ப்பரேட் வங்கிகளில் உள்ள ‘ரிலேஷன்ஷிப் மேனேஜர்’ மற்றும் ‘சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்’ போன்ற பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு இலக்குகளை  எட்டுவதில் கடும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக நிதியாண்டு இறுதி காலங்களில் இந்த நெருக்கடி உச்சத்தை எட்டுகிறது. மதனின் இந்த வீடியோவைப் பார்த்த பல இளம் ஊழியர்கள், தாங்களும் இதுபோன்ற கசப்பான அனுபவங்களைச் சந்தித்ததாகப் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Chirag Madaan (@yourbankerchirag)

ஒரு பயனர் தனது பதிவில், “நானும் 23 வயதில் ஆக்சிஸ் வங்கிப் பணியை விட்டு வெளியேறினேன். இப்போது எஸ்பிஐ கார்டில் பின்புலப் பணியில் உள்ளேன். இங்கும் அழுத்தம் இருந்தாலும், வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பொருட்களை விற்க வேண்டிய அவசியம் இல்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் பதிவிடுகையில், “வங்கிகளில் வாடிக்கையாளர்களின் உழைப்பை மதிக்காமல், இலக்குகளுக்காகத் தவறான முதலீட்டுத் திட்டங்களை அவர்களிடம் திணிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மார்ச் மாதங்களில் இது அப்பட்டமாக நடக்கிறது,” என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் உயரிய சம்பளத்தை விட நிம்மதியான வாழ்வே முக்கியம் என்ற நோக்கில் இந்த இளைஞர் எடுத்துள்ள முடிவு, கார்ப்பரேட் நிறுவனங்களின் பணிச் சூழல் குறித்துப் புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.