ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனது 52-வது வயதில் காலமானார்.
அவரது மறைவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மரணத்திற்கான திடுக்கிடும் காரணத்தை அவரது மகன் ஜாக்சன் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜாக்சன், “எனது தந்தையின் மரணத்திற்குத் தடுப்பூசியின் பங்கு நிச்சயம் உண்டு என்று நான் நம்புகிறேன். அவருக்கு ஏற்கனவே சில உடல்நலப் பிரச்சனைகள் இருந்தாலும், கொரோனா தடுப்பூசிதான் பாதிப்பைத் தீவிரப்படுத்திவிட்டது. இது குறித்துப் பேசினால் சர்ச்சை ஏற்படும் என்று எனக்குத் தெரியும், ஆனால் இதுதான் உண்மை.
எனது தந்தைக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமே இல்லை. ஆனால் வேலை நிமித்தமாக அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். அவர் 3 அல்லது 4 தடுப்பூசிகளைப் போட்டிருப்பார் என நினைக்கிறேன். அந்தச் செய்தியைக் கேட்ட உடனே நான் ஆஸ்திரேலிய அரசாங்கத்தைத் தான் குற்றம் சாட்டினேன்.
இதைப் பற்றி நினைத்தாலே எனக்குக் கோபம் வருகிறது” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஜாக்சனின் இந்த வெளிப்படையான பேச்சு தற்போது விளையாட்டு உலகில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
