நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான திருத்த மசோதாக்களை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படும் போதே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.-யுமான கே.சி. வேணுகோபால், இந்த மசோதாக்கள் குறித்துப் பேசத் தொடங்கினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறுக்கிட்டு சில விளக்கங்களைக் கூறினார். இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிகள், திமுக கட்சியின் எம்பிக்கள் என இந்தியா கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.