மத்தியப் பிரதேச மாநில பாடத்திட்டத்தின் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரதிபா சிங் சோலங்கி 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். குனூர் பகுதியில் உள்ள ‘சரஸ்வதி ஞான் மந்திர்’ உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பிரதிபா, எவ்வித தனியார் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல் இந்த இமாலய வெற்றியைப் பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து அவர் ஊடகங்களிடம் கூறியதாவது,

எனது வெற்றிக்கு பெற்றோரும் ஆசிரியர்களுமே முக்கிய காரணம். தினமும் 4 முதல் 5 மணிநேரம் வரை முறையாகப் படிப்பேன். கைபேசி பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, சுய முயற்சியிலேயே அதிக கவனம் செலுத்தினேன். பள்ளியில் எடுக்கும் பாடங்களை அன்றே படித்து முடித்துவிடுவேன்.

மாலை நேரத்தில் சிறிது நேரம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள பிரதிபா, இரவில் தீவிரமாகப் படிப்பார். இரவில் படித்தவற்றை அடுத்த நாள் காலையில் மீண்டும் ஒருமுறை நினைவு கூர்வதை (Revision) அவர் ஒரு உத்தியாகவே கையாண்டுள்ளார். சிறிய பள்ளியில் படித்து மாநில அளவில் முதலிடம் பிடித்த இம்மாணவியின் விடாமுயற்சி மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

இந்தச் சாதனையைப் பாராட்டியுள்ள மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், “பன்னா மாவட்டத்திலிருந்து உண்மையான ஒரு வைரம் வெளிவந்துள்ளது” எனப் புகழ்ந்துள்ளார். பன்னா மாவட்டம் வைரச் சுரங்கங்களுக்குப் பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரதிபா சிங் சோலங்கிக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.