துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான சான்லியுர்பாவில் உள்ள ஒரு தொழிற்கல்வி பள்ளியில், 18 வயது முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குள் நுழைந்த அந்த மாணவன், கையில் இருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினான்.
இந்தச் சம்பவத்தில் 10 மாணவர்கள், 4 ஆசிரியர்கள், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் கேன்டீன் ஊழியர் என மொத்தம் 16 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். வகுப்பறைக்குள் நுழைந்த அவன், எதைக் குறித்தும் யோசிக்காமல் சரமாரியாகச் சுட்டதைக் கண்டு மாணவர்கள் ஜன்னல் வழியாகக் குதித்து உயிர் தப்பியுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அந்த மாணவன் பள்ளி கட்டிடத்திற்குள்ளேயே ஒளிந்து கொண்டான். தகவலறிந்து வந்த அதிரடிப்படை போலீசார் பள்ளியைச் சுற்றி வளைத்தனர். தப்பிக்க வழியில்லாத நிலையில், அந்த மாணவன் தான் வைத்திருந்த அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டான்.
காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மாகாணத் தலைநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். அமைதியான கல்விச் சாலையில் அரங்கேறிய இந்த ரத்த வெறியாட்டம், துருக்கி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
