ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த மோதலில், கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியது. 40 நாட்களாக நீடித்த இந்த ரத்தக் களரிக்குப் பிறகு, கடந்த 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 2 வார கால போர் நிறுத்தத்தால் பதற்றம் சற்று தணிந்தது.
இருப்பினும், பாகிஸ்தானில் நடைபெற்ற முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இச்சூழலில், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய 5 நாடுகள், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஈரான் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்றுள்ள ஈரானின் ஐ.நா பிரதிநிதி அமீர்-சையது இரவானி, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அந்த 5 நாடுகளின் தவறான சர்வதேச செயல்பாடுகளால் ஈரானின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மக்களின் உணர்வுப்பூர்வமான காயங்களுக்கு அந்த நாடுகளே முழுமையான நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபுறம் முடங்கியுள்ள நிலையில், தற்போது கிளம்பியுள்ள இந்த ‘இழப்பீடு’ விவகாரம் வளைகுடா நாடுகளில் மீண்டும் ஒரு பெரிய அரசியல் மோதலுக்கு வித்திட்டுள்ளது.
