லண்டனில் கைநிறைய சம்பளம், செட்டில் ஆன வாழ்க்கை எனப் பலரது கனவு வாழ்க்கையை வாழ்ந்து வந்த மானவ் ஷா என்ற இளைஞர், திடீரென தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பியிருப்பது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் பிசியோதெரபிஸ்டாகப் பணியாற்றி வந்த மானவ், ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்தார்.

சர்வதேச அனுபவம், அழகான நட்பு என எல்லாம் இருந்தபோதிலும், அங்குள்ள 9 முதல் 5 மணி நேர வேலைத் திட்டம் தன்னை ஒரு இயந்திரமாக மாற்றுவது போன்ற உணர்வைத் தந்ததாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தனது வைரல் வீடியோவில் இது குறித்துப் பேசியுள்ள மானவ், வெளிநாட்டில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், குடும்பத்தினருடன் அமர்ந்து ஒரு கப் டீ குடிப்பது போன்ற சிறிய மகிழ்ச்சிகளுக்கு அங்கு இடமில்லை எனக் கூறியுள்ளார். “அன்புக்குரியவர்களின் அருகாமையும், உணர்வுப்பூர்வமான பிணைப்பும் தராத மகிழ்ச்சியை வெறும் பணம் மட்டும் தந்துவிடாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Manav Shah (@physiomanav)

தற்போது இந்தியா திரும்பியுள்ள அவர், ‘Rehabond’ என்ற பெயரில் சொந்தமாக ஸ்டார்ட்-அப் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்தியாவில் வாழ்க்கைச் செலவு குறைவு என்பதோடு, தரமான மருத்துவ வசதிகள் எளிதில் கிடைப்பதையும் அவர் ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மானவ் ஷாவின் இந்த முடிவு சமூக வலைதளங்களில் இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர், “வாழ்க்கையில் பணத்தை விட நிம்மதியே முக்கியம்” என அவரைப் பாராட்டி வருகின்றனர். மற்றொரு தரப்பினரோ, “ஒவ்வொருவரின் பொருளாதாரச் சூழலும் மாறுபட்டது, லண்டன் போன்ற நாடுகளின் வாய்ப்புகளை இழப்பது அவ்வளவு எளிதல்ல” என விவாதித்து வருகின்றனர்.