தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், விவசாயிகளைப் பெரிய அளவில் கவரும் வகையிலான அறிவிப்புகள் அணிவகுத்துள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் பிஎம்-கிசான் (PM-KISAN) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியுடன், மாநில அரசின் பங்காகக் கூடுதலாக 3,000 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் 9,000 ரூபாய் நேரடி நிதியுதவியாகக் கிடைக்கும்.

இதுமட்டுமின்றி, சிறு மற்றும் குறு விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பில் ஈடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள 50,000 ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும் என்ற அதிரடி வாக்குறுதியையும் பாஜக முன்வைத்துள்ளது. ​விவசாயம் மட்டுமின்றி சாமானிய மக்களின் மின்சாரச் சுமையைக் குறைக்கவும் புதிய திட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்காக மேற்கூரை சோலார் பேனல்கள் அமைக்க, மத்திய அரசின் ஊக்கத்தொகையுடன் மாநில அரசின் பங்காக 25,000 ரூபாய் சேர்த்து, மொத்தம் 1,00,000 ரூபாய் வரை நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரம் என்ற பேச்சுகளுக்கு மத்தியில், நிரந்தரமான மின் தீர்வை நோக்கி மக்களை நகர்த்தும் இந்த ‘சோலார்’ பிளான் மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “இனி கரண்ட் பில் கவலையே இல்லை” என்ற ரீதியில் பாஜகவினர் இந்த வாக்குறுதியை வைரலாக்கி வருகின்றனர்.