உத்தரப் பிரதேசத்தில் திருமணமான முதல் இரவிலேயே மணமகன் வீட்டாரிடம் புதுப்பெண் 90 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் தராததால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் வீட்டார், மணமகன் குடும்பத்தினரை வீட்டுக்குள் வைத்து பூட்டி தீவைக்க முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் ஆக்ரா நகரின் ஜகதீஷ்புரா பகுதியைச் சேர்ந்த ஒரு மருத்துவருடைய சகோதரருக்கும், ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. சடங்குகள் முடிந்து மணமகள் முறைப்படி புகுந்த வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
திருமணம் முடிந்த முதலிரவின் போது, மணமகன் அறைக்குள் நுழைந்துள்ளார். அப்போது மணப்பெண் அவரிடம் ஒரு வினோத நிபந்தனையை விதித்துள்ளார். “நமது தாம்பத்ய உறவு தொடர வேண்டும் என்றால், முதலிரவுக்கு முன்பாக எனக்கு ரூ.90 லட்சம் ரொக்கமாக தர வேண்டும். இல்லையெனில் உங்களைத் தொட விடமாட்டேன்” என்று மணப்பெண் கறாராகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகன் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் இறங்கி வரவில்லை.
தனது குடும்பத்தினருக்கு மணப்பெண் தகவல் தெரிவிக்க, அவர்கள் ஆக்ராவுக்கு விரைந்து வந்தனர். அப்போது இரு வீட்டாருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. மாப்பிள்ளை வீட்டார் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, மணமகள் வீட்டார் எங்கள் வீட்டு வீட்டை அடித்து நொறுக்கினர். எரிவாயு பைப்லைனை (PNG) துண்டித்து, வீட்டை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு தீவைக்க முயன்றனர். அலாரச் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாங்கள் உயிர் தப்பினோம்.
மேலும், இந்தப் பெண் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும், பணத்திற்காகவே மணம் முடித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். பணம் கிடைக்காத ஆத்திரத்தில், தனது நகைகள் மற்றும் மாமியாருக்குச் சொந்தமான நகைகளை எடுத்துக் கொண்டு தனது குடும்பத்தினருடன் அந்தப் பெண் தப்பியோடிவிட்டதாக மணமகன் தரப்பில் கூறப்படுகிறது.
உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மணமகன் தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்திருமணத்தை நடத்தி வைத்த புரோக்கரையும் போலீசார் தேடி வருகின்றனர். அதே சமயம், இது வரதட்சணை கொடுமையால் ஏற்பட்ட மோதலா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
