ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், பந்தை மாற்றியபோது ஆர்சிபி வீரர் டிம் டேவிட் நடந்து கொண்ட விதம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்சிபி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, பந்து பழுதடைந்ததால் புதிய பந்து கொண்டு வரப்பட்டது. வழக்கமாகப் பந்து மாற்றப்படும்போது பந்துவீச்சாளர்கள் மட்டுமே அதனைச் சரிபார்ப்பது வழக்கம். ஆனால், களத்திலிருந்த டிம் டேவிட் திடீரென அந்தப் பந்தை வாங்கி, ஒரு பந்துவீச்சாளரைப் போல தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கினார்.

கள நடுவர் ஸ்வரூபானந்த் கண்ணூர் பந்தைத் திரும்பக் கேட்டும், டிம் டேவிட் அதைக் கொடுக்காமல் தொடர்ந்து ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் மற்றொரு நடுவர் வீரேந்தர் சர்மா தலையிட்டு, டிம் டேவிட்டிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த பின்னரே ஆட்டம் தொடர்ந்தது.

 

இது குறித்து வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “பேட்டர்கள் பந்தை ஆய்வு செய்ய அனுமதி இல்லை. இது ஐபிஎல் விதிமுறை 2.10.7-ன் படி ஆட்டத்தை தாமதப்படுத்தும் செயலாகக் கருதப்படலாம் எனச் சுட்டிக்காட்டினார். இதற்கிடையே, டேல் ஸ்டெய்ன் நகைச்சுவையாக, இப்போது எல்லாரும் பந்துவீச்சாளர் ஆகிவிட்டார்கள் எனக் கிண்டல் செய்தார்.

இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஆர்சிபி அதிரடி காட்டியது. பில் சால்ட் (78), விராட் கோலி (50) ஜோடி 120 ரன்கள் குவித்து பலமான அடித்தளம் அமைத்தது. கேப்டன் ரஜத் படிதார் 53 ரன்கள் எடுத்து விளாசினார். இறுதியில் டிம் டேவிட் 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது.

மேலும் வான்கடே மைதானத்தில் ஆர்சிபி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கிடையே, மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ள செய்தி அந்த அணி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.