பழைய மற்றும் பயன்படுத்தப்படாத மொபைல் போன்களைக் கொண்டு நடத்தப்படும் ஒரு வினோதமான இணையவழி மோசடியைக் கான்பூர் காவல்துறை கண்டறிந்து, இதில் தொடர்புடைய 20 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளது. பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரிக்கும் வியாபாரிகள் மூலம் பொதுமக்களிடமிருந்து சேதமடைந்த போன்கள் குறைந்த விலைக்கு வாங்கப்படுகின்றன.

பின்னர், இந்த போன்களில் உள்ள மதர்போர்டு போன்ற முக்கிய பாகங்களை அகற்றி, மோசடிக்காரர்கள் தங்களுக்கு ஏற்றவாறு புதிய போன்களை உருவாக்குகின்றனர். இந்த பிரத்யேக போன்களை 5,000 முதல் 50,000 ரூபாய் வரை இணையக் குற்றவாளிகளுக்கு விற்று வந்துள்ளனர்.

மேலும், பழைய போன்களில் இருந்து அழிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளைத் தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் மீட்டெடுத்து, அதைக் கொண்டும் மக்களை மிரட்டிப் பணம் பறிக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இணையக் குற்றவாளிகள் இந்த போன்களில் மெய்நிகர் எண்கள் மற்றும் விபிஎன் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால், இவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவது காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது பழைய போன்களைத் தெருவோர வியாபாரிகளிடம் விற்பதைத் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவேளை பழைய போன்களை விற்க நேர்ந்தால், அதில் உள்ள அனைத்து கணக்குகளையும் லாக்-அவுட் செய்து, எஸ்டி கார்டை அகற்றிவிட்டு, போனை முழுமையாக ரீசெட்  செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இணைய பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தரவுகள் தவறான கைகளுக்குச் செல்வதைத் தடுக்க முடியும்.