பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடரில், லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பெஷாவர் சல்மி அணியின் கேப்டன் பாபர் அசாம் தலையில் பந்து தாக்கி காயமடைந்தார். கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், லாகூர் கலாண்டர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பெஷாவர் அணியின் இன்னிங்ஸின் போது, 6-வது ஓவரின் முதல் பந்தை இளம் வேகப்பந்துவீச்சாளர் உபெய்ட் ஷா வீசினார். 125.7 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட அந்தப் பந்தை, பாபர் அசாம் இறங்கி வந்து ‘புல் ஷாட்’ ஆட முயன்றார்.

 

துரதிர்ஷ்டவசமாகப் பந்து பேட்டில் படாமல், பாபரின் தோள்பட்டையில் பட்டுத் தெறித்து அவரது கழுத்து மற்றும் ஹெல்மெட்டின் கீழ்ப்பகுதியை பலமாகத் தாக்கியது. பந்து தாக்கிய வேகத்தில் நிலைதடுமாறிய பாபரை பரிசோதிக்க, அணியின் பிசியோதெரபிஸ்ட் உடனடியாக மைதானத்திற்குள் விரைந்தார். அவருக்குத் தலையில் அதிர்வு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் ‘கன்கஷன்’ (Concussion test) பரிசோதனை செய்யப்பட்டது. மேலும்  அதிர்ஷ்டவசமாகப் பெரிய பாதிப்புகள் இல்லாததால், பாபர் தொடர்ந்து பேட்டிங் செய்தார்.