இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குஜராத் மாநிலம் சூரத் அரசு மருத்துவமனையில் தனக்குக் கிடைத்த இலவச மற்றும் தரமான சிகிச்சையைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார். சூரத்தில் தங்கியிருந்தபோது தெருநாய் கடித்ததால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வேசு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றார்.

அங்கு அவருக்கு எந்தக் கட்டணமும் இன்றி உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன், அடுத்தடுத்த டோஸ்கள் குறித்த தெளிவான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. வெளிநாடுகளில் இத்தகைய சிகிச்சைக்குப் பல ஆயிரங்கள் செலவாகும் நிலையில், இந்தியாவில் மிக வேகமாகவும், தூய்மையாகவும், முற்றிலும் இலவசமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டதை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

 

‘Indo-German Vibes’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “அரசு மருத்துவமனை இவ்வளவு சுத்தமாகவும், இவ்வளவு வேகமாகவும் செயல்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என அந்த ஜெர்மனி இளைஞர் இந்திய சுகாதாரக் கட்டமைப்பைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்தியாவின் பொதுச் சுகாதாரத் திட்டங்களைப் பாராட்டி வருவதுடன், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இவ்வளவு எளிதாக இலவச சிகிச்சை கிடைப்பது கடினம் என ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயைத் தடுக்க இந்திய அரசு செயல்படுத்தி வரும் தீவிரத் தடுப்பூசித் திட்டங்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.