தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவாகப் பிரபல நடிகர் ராமராஜன் தேர்தல் பிரச்சாரத்தில் குதிக்க உள்ளார். ஏற்கனவே அ.தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளராக வலம் வந்த ராமராஜன், தற்போது விஜய்யின் அரசியல் வருகையை ஆதரித்து தென் மாவட்டங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார்.

இது குறிப்பாக, நெல்லை மாவட்டம் ஆலங்குளம் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வட மாவட்டங்களைத் தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் தனது செல்வாக்கை வலுப்படுத்தி வரும் நிலையில், ‘மக்கள் நாயகன்’ என்று அழைக்கப்படும் ராமராஜனின் வருகை அக்கட்சிக்கு கூடுதல் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் பிரச்சாரப் பயணங்களுக்குக் கிடைத்து வரும் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ராமராஜன் போன்ற அனுபவம் வாய்ந்த திரைத்துறை பிரபலங்கள் ஆதரவு தெரிவிப்பது த.வெ.க தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் த.வெ.க ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.