ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறித்து சமூக வலைதளத்தில் கிண்டலாகப் பதிவிட்ட இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயரின் சகோதரி ஸ்ரேஸ்தா ஐயருக்கு, இணையதள வாசிகள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையிலான போட்டி மழையினால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்தானது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்ரேயஸ் ஐயரின் சகோதரி ஸ்ரேஸ்தா ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், “நாங்கள் பஞ்சாபிகள்.. எங்களுக்குப் பெரிய மனசு உண்டு. இதோ, உங்களுக்கு (கேகேஆர் அணிக்கு) ஒரு புள்ளியை தானமாக வழங்குகிறோம்” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ கொல்கத்தா அணி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஸ்ரேஸ்தா ஐயரின் பதிவிற்குப் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, சிலர் அவருக்குத் தனிப்பட்ட முறையில் மிரட்டல் செய்திகளையும் அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த வீடியோவை தற்போது நீக்கியுள்ளார். வீடியோவை நீக்கியது குறித்து ஸ்ரேஸ்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,நான் பதிவிட்ட வீடியோ தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அது வெறும் வேடிக்கைக்காகச் செய்யப்பட்டது மட்டுமே. ஆனால், அதற்குப் பதிலாக எனக்கு மிரட்டல் செய்திகள் வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது. நான் தவறு செய்துவிட்டேன் என்பதால் இந்த வீடியோவை நீக்கவில்லை. எனது சகோதரர் மற்றும் அவரது அணியின் கண்ணியத்தை மதித்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். இணையதளத்தில் வெறுப்பைப் பரப்புவதை நிறுத்திவிட்டு, ஒருவருக்கொருவர் அன்பாக இருப்போம்.

முன்னதாக அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், “இது வெறும் விளையாட்டுதான். எனது சகோதரரை ஆதரிக்கவே நான் வீடியோக்களைப் போடுகிறேன். எந்த அணியையும் நான் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. இதில் வன்முறைக்கு இடமில்லை, விளையாட்டை விளையாட்டுத்தனமாக அணுகுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் வீரர்களின் குடும்பத்தினரை இணையதளத்தில் குறிவைத்துத் தாக்குவதும், மிரட்டல் விடுப்பதும் கிரிக்கெட் வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.