ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

குவஹாத்தி ஏசிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், ராஜஸ்தான் அணி ரன் சேஸிங்கின் போது வைபவ் சூர்யவன்ஷியை ‘இம்பாக்ட் சப்’ (Impact Sub) வீரராகக் களம் இறக்கியது. களம் புகுந்த முதல் பந்திலிருந்தே அதிரடியில் இறங்கிய அவர், அனுபவம் வாய்ந்த சர்வதேச பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார்.

குறிப்பாக, ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் வீசிய ஒரு ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசி 19 ரன்களைக் குவித்தார். அதேபோல், அனுபவ வீரர் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்களைப் பறக்கவிட்டு, 15-வது பந்திலேயே தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.

இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் 18 பந்துகளில் 57 ரன்கள் (8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்துள்ள அவரது ஸ்டிரைக் ரேட் 316.67 ஆக உள்ளது. இதற்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சிலும் இதேபோல் அதிரடி காட்டியிருந்த வைபவ், ஹேசில்வுட் மற்றும் புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்களுக்கு எதிராகவும்  அடித்து ஆடியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் வைபவ்வின் இந்த அசாத்தியமான திறமையைக் கண்ட ரசிகர்கள், அவரை உடனடியாக இந்தியத் தேசிய அணிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் (X -ல்) விவாதித்து வருகின்றனர். 15 வயதிலேயே ஐபிஎல் தொடரில் இரண்டு முறை 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ள ஒரே வீரர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.