மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள குருளி பகுதியில் மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 27 வயதான பஸ்ரின் மெகபூப் ஷேக் என்ற பெண், தனது கள்ளக்காதலன் ராம் விநாயக் என்பவருடன் கடந்த சில மாதங்களாக வசித்து வந்துள்ளார்.
இவர்களது கள்ளக்காதலுக்குப் பெண்ணின் 6 வயது மகன் ஆவேஜ் தடையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகன் என்றும் பாராமல் அந்தச் சிறுவனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 4-ம் தேதி இரவு, சிறுவனின் தலையைத் தண்ணீர் வாளியில் அமிழ்த்தியும், சுவர் மற்றும் தரையில் மோதியும் மிகக் கொடூரமாகக் கொன்றுள்ளனர்.
பின்னர் இது இயற்கையான மரணம் என்று நாடகமாடி, சடலத்தை பீட் மாவட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனின் தாத்தாவுக்குச் சடலத்தின் மேல் இருந்த காயங்களைப் பார்த்துச் சந்தேகம் வரவே, அவர் போலீசில் புகார் அளித்தார்.
பிரேதப் பரிசோதனையில் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, கல்நெஞ்சம் படைத்த அந்தத் தாயை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய அவரது கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
