மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதை ஆற்றில், ஆன்மீகச் சடங்குகளுக்காக சுமார் 11,000 லிட்டர் பால் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பாதலேஷ்வர் மகாதேவ் கோயிலில் நடந்த 21 நாள் மகா யாகத்தின் ஒரு பகுதியாக, நர்மதை நதியைத் தூய்மைப்படுத்தவும் உலக அமைதிக்காகவும் இந்த வழிபாட்டை பக்தர்கள் நடத்தியுள்ளனர்.

இதற்காக 41 டன் நெய் மற்றும் தங்கம், வெள்ளி, மூலிகைகள் எனப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் சமமாக எழுந்துள்ளன. இந்தச் செயலை விமர்சிப்பவர்கள், மாநிலத்தில் நிலவும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும், 57 சதவீத பெண்கள் ரத்த சோகையாலும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இவ்வளவு பெரிய அளவில் பாலை ஆற்றில் ஊற்றுவது முறையல்ல என்று அவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், இது தங்களின் ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடு என்றும், இதற்குத் தனிப்பட்ட முறையில் நிதி திரட்டப்பட்டதால் மத நடைமுறைகளில் யாரும் தலையிடக் கூடாது என்றும் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.