மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி அருகே உள்ள மேக்லி கிராமத்தைச் சேர்ந்த சகோதரி காஜல் சோப்டே (23) மற்றும் அவரது சகோதரர் கிரண் சோப்டே (26) ஆகியோர் பல்தன் நகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். தனது இறுதி ஆண்டு புராஜெக்ட் தொடர்பாக ஆசிரியரைச் சந்தித்து, சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் தன்னை இணைக்குமாறு கேட்பதற்காக காஜல் சென்ற நிலையில், வேலை முடிந்து வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பல்தன் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், இன்று காலை மால்ஷிராஸ் பகுதியில் உள்ள நீரா உஜவா கால்வாயில் இவர்களின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் மக்களின் உதவியுடன் சடலங்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரிக்குச் சென்ற பிள்ளைகள் பிணமாகத் திரும்பியதால் மேக்லி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தற்செயலான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ள நாதேபுதே போலீசார், இது தற்கொலையா அல்லது கால்வாயில் தவறி விழுந்து ஏற்பட்ட விபத்தா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த துயர சம்பவம் சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
