எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரு திரைப்படமாகவே இருந்தாலும், அது திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையதளத்தில் கசிந்தால், அதன் பின்னால் இருக்கும் படைப்பாளிகள் முற்றிலுமாக நிலைகுலைந்து போவார்கள் என்று இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் “ஜனநாயகம்” திரைப்படத்தின் காட்சிகள் சட்டவிரோதமாக கசிந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஒரு பிரம்மாண்டமான படைப்பின் காட்சிகள் இதுபோன்று முன்கூட்டியே வெளியாவது, அந்தப் படத்தின் உருவாக்கத்திற்காக உழைத்தவர்களுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தையும், நெருக்கடியையும் கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை ஒரு படைப்பாளியின் கோணத்தில் இருந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மோகன் ஜி, இதுபோன்ற கசிவுகளை இணையத்தில் பரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பல ஆண்டுகால உழைப்பும் முதலீடும் அடங்கிய ஒரு கலைப்படைப்பை, சில நிமிடப் பதிவுகள் மூலம் சிதைப்பது அந்தப் படக்குழுவினரின் மன உறுதியைக் குலைக்கும் செயலாகும். எனவே, சினிமா துறையின் மீதான மரியாதையுடன், திருட்டுத்தனமாக வெளியாகும் காட்சிகளை ஊக்குவிக்காமல் இருக்க வேண்டும் என்பதே அவரது இந்த உருக்கமான பதிவின் கருத்தாக உள்ளது.