நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் இணையதளங்களில் கசிந்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்கு நடிகர் சிபி சத்யராஜ் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, அதன் சில முக்கிய காட்சிகள் மற்றும் படப்பிடிப்புத் தள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இது படக்குழுவினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நடிகர் சிபி சத்யராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகள் கசிந்துள்ள செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு, பணம் மற்றும் அர்ப்பணிப்பை இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் உணர வேண்டும். தயவுசெய்து யாரும் கசிந்த வீடியோக்களைப் பார்க்க வேண்டாம்; மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு படத்தின் வெற்றி என்பது திரையரங்குகளில் அந்தப் படைப்பைப் பார்க்கும் போது மட்டுமே முழுமையடையும். பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் படங்களின் காட்சிகள் இவ்வாறு கசிவது ஒட்டுமொத்தத் திரையுலகையும் பாதிக்கும் என்பதால், ரசிகர்கள் இத்தகைய வீடியோக்களைப் புறக்கணிக்க வேண்டும் எனத் திரையுலகைச் சார்ந்த பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது இந்தக் கசிவு தொடர்பாகப் படக்குழுவினர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
