டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராம் ராம்புரா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில், கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒரு பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ‘தருண் எண்டர்பிரைசஸ்’ என்ற பட்டறையில் ஹர்விந்தர் மற்றும் நரேஷ் ஆகிய இரு நண்பர்கள் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். மதிய உணவு நேரத்தில் இருவரும் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவர்களுக்குள் ஒரு சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த நரேஷ், அங்கிருந்த சக்திவாய்ந்த ‘இண்டஸ்ட்ரியல் ஏர் கம்ப்ரஸர்’ குழாயை எடுத்து, ஹர்விந்தரின் பின்பகுதியில் வைத்து காற்றைத் திறந்துவிட்டுள்ளார். அந்த ராட்சத காற்றழுத்தம் ஹர்விந்தரின் உடலுக்குள் மின்னல் வேகத்தில் புகுந்ததில், அவரது வயிறு பலூன் போல உப்பி, ஒரு கட்டத்தில் உள்ளுறுப்புகள் அனைத்தும் வெடித்துச் சிதறின.

அதிர்ச்சியில் உறைந்த சக ஊழியர்கள், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஹர்விந்தரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரது குடல்கள் மற்றும் உள்ளுறுப்புகள் வெடிகுண்டு வெடித்தது போலச் சேதமடைந்திருந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான ஹர்விந்தர், தனது குடும்பத்தைக் காப்பாற்ற கடந்த 8 ஆண்டுகளாக குருகிராமில் வெல்டராகப் பணியாற்றி வந்தார்.

தற்போது அவரது தந்தை மற்றும் குழந்தைகள் தங்களது ஒரே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், நண்பனைக் கொன்ற நரேஷைக் கைது செய்துள்ளனர். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஏர் கம்ப்ரஸர்கள் விளையாடும் பொருட்கள் அல்ல என்றும், அவை சில நொடிகளில் நுரையீரலையும் குடலையும் கிழித்துவிடும் அபாயம் கொண்டவை என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.