மத்திய பிரதேசத்தில் ஆன்மீகம் என்ற பெயரில் அரங்கேறிய ஒரு செயல் தற்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவும், ஆற்றில் உள்ள மீன்களுக்கு “பால் புகட்டும்” விசித்திரமான நேர்த்திக்கடனுக்காகவும் பக்தர்கள் 11,000 லிட்டர் பாலை டேங்கர் லாரி மூலம் நர்மதை ஆற்றில் கொட்டியுள்ளனர்.

ஆற்றில் வெண்ணிற அலைகள் எழும்பி ஓடிய இந்தத் துயரக் காட்சி, பார்ப்பவர்களை ஒருபுறம் வியக்க வைத்தாலும், மறுபுறம் இயற்கை ஆர்வலர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

நன்னீர் நிலையில் இவ்வளவு பெரிய அளவில் பால் கலப்பது, ஆற்றில் உள்ள ஆக்சிஜன் அளவை முற்றிலுமாகக் குறைத்து, அங்குள்ள மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களை மூச்சுத்திணறச் செய்து ஒட்டுமொத்தமாக அழிக்கும் “சுற்றுச்சூழல் பேரழிவை” ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

 

ஒருபுறம் நாட்டில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பசியால் வாடும் நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பாலை இப்படி ஆற்றில் கொட்டுவது எந்த விதத்தில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பாலில் உள்ள கொழுப்பும் புரதமும் மீன்களின் செவுள்களை அடைத்து, அவை சுவாசிக்க முடியாமல் துடிதுடித்து இறக்கக் காரணமாகிறது.

பக்தி என்பது மற்றவர்களுக்கு உதவுவதில்தான் இருக்கிறது என்பதை உணராமல், புனிதமான ஆற்று நீரையே நஞ்சாக்கும் இத்தகைய செயல்கள் தேவையற்றவை என்பதே பலரது கருத்தாக உள்ளது. இந்த 11,000 லிட்டரில் 11 லிட்டரை மட்டும் ஆற்றுக்குச் சமர்ப்பித்துவிட்டு, மீதமுள்ள பாலை ஏழை குழந்தைகளுக்கு வழங்கியிருந்தால், அந்தப் பிஞ்சுகளின் சிரிப்பில் கடவுளைக் கண்டிருக்கலாம் என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர்.